தேர்தல் நடத்த விரும்பும் மத்திய அரசு.. ஆனால் மகுடம் இல்லாத மன்னர்கள் நாச வேலையில் ஈடுபடுகின்றனர்.. ஓமர் அப்துல்லா
ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் மகுடம் இல்லாத மன்னர்கள் நாச வேலையில் ஈடுபடுகின்றனர் என்று ஓமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜம்மு அண்டு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு ஓமர் அப்துல்லா கூறியதாவது: இங்குள்ள உள்ளாட்சி நிர்வாகத்திடம் இந்த கேள்வியை (தேர்தல் பற்றி) கேட்க வேண்டும். பிரதமரும், உள்துறை அமைச்சரும் தேர்தல் பற்றி (ஜம்மு காஷ்மீரில்) பேசிக்கொண்டிருக்கும் வேளையில், உள்ளாட்சி நிர்வாகம் நாச வேலையில் ஈடுபட்டுள்ளது.
ஏனென்றால் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க விரும்பாத மகுடம் இல்லாத பல மன்னர்கள் உள்ளனர். செயலகத்தில் அமர்ந்திருக்கும் சிலர் அதிகாரம் தங்களுடன் ஒரு மையப்படுத்தப்பட்ட வழியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2019ல் மத்திய அரசு 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது முதல் மக்களுக்கும், தலைமைக்கும் இருந்த இடைவெளியை இணைக்க ராம்பன் சென்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டபிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாக பிரித்தது. கடந்த அக்டோபரில் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, எல்லை நிர்ணய செயல்முறை முடிந்து தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.