×

பாஜக மீது அதிருப்தி… ஆசைகாட்டி வலைவிரிக்கும் திமுக… நயினார் நாகேந்திரனின் அடுத்த அரசியல் மூவ்

அதிமுகவில் கொடிகட்டி பறந்த நயினார் நாகேந்திரன், பாஜகவில் இணைந்தார். மாநில தலைவர் பதவி ரேஸில் இருந்தும் கிடைக்காமல் போனது. இதனால் அதிருப்தியில் இருந்து அவரிடம் திமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நயினார் நாகேந்திரன். பல்வேறு துறைகளுக்கு அவரை நியமித்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. 2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சசிகலாவின் ஆதரவாளராக இருந்ததால் அவர் போக்குவரத்து
 

அதிமுகவில் கொடிகட்டி பறந்த நயினார் நாகேந்திரன், பாஜகவில் இணைந்தார். மாநில தலைவர் பதவி ரேஸில் இருந்தும் கிடைக்காமல் போனது. இதனால் அதிருப்தியில் இருந்து அவரிடம் திமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நயினார் நாகேந்திரன். பல்வேறு துறைகளுக்கு அவரை நியமித்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. 2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சசிகலாவின் ஆதரவாளராக இருந்ததால் அவர் போக்குவரத்து துறை, மின்துறை, தொழில்துறை ஆகிய முக்கிய இலாகாக்களின் அமைச்சராக வலம் வந்தார். 2006 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2011-ல் அவருக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி, அதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் என அவரின் அரசியல் களம் சிறப்பாகவே இருந்தது.

2016 தேர்தலில் நெல்லை தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனை அடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 2017-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜகவில் இணைந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தினார். இறுதிச் சுற்று வரை அவரது பெயரும் பரீசீலனையில் இருந்தது, யாரும் எதிர்பார்ககாத வகையில் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அரசியலில் ஆர்வம் காட்டாமல் அதிருப்தியில் இருந்த அவரை சமீபத்தில் நெல்லை வந்த மாநில தலைவர் முருகன் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து கொண்ட நெல்லை திமுக நிர்வாகிகள், நயினாரை இழுக்கும் முயற்சி நடந்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், கே.என்.நேருவை நயினார் நாகேந்திரன் அண்மையில் சந்தித்து பேசியதுதான் அரசியல் ஹாட்பீட். திமுகவில் இணைய வேண்டுமானால் தனக்குள்ள நிபந்தனைகளை கூறியிருக்கிறார் நயினார். தற்போது, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ஆவுடையப்பனை மாற்றிவிட்டு அந்த பொறுப்பை நயினாருக்கு வழங்குவதாக பேசப்பட்டுள்ளது. விரைவில் அவர் திமுகவில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரி தொகுதிகளில் தனது சாதி ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது என்றும் இதனை இந்த தொகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்றும் நயினார் கட்டிஷன் போட்டுள்ளார். இந்த தகவல் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு நயினாரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என்றும் பாஜக மீது மன வருத்தத்தில் இருக்கிறேன் என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ள நயினார் நாகேந்திரன், பாஜகவில் இருந்து விலகும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.