×

"அய்யா ஆளுநர் ரவி இது தமிழ்நாடு உரச வேண்டாம்" - கிழித்து தொங்கவிட்ட  முரசொலி!

 

குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி அரசியல் களத்தில் அனலை பரப்பியுள்ளது. ஏனென்றால் அது வாழ்த்துச் செய்தி போல் அல்லாமல் அரசியல் செய்தியாக இருந்தது. அதுவும் தமிழ்நாட்டின் மிக முக்கியமான இரண்டு விவகாரங்களில் அவரின் கருத்து இடம்பெற்றிருந்தது. அதாவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றியிருந்தார். பூவினும் வாசம் போல அரசியல் செய்தி ஒழிந்திருந்தது. அந்தப் பூ தாமரையோ என்ற சந்தேகமும எழாமல் இல்லை. அந்த இரண்டு விவகாரங்களில் ஒன்று நீட். மற்றொன்று மும்மொழிக் கொள்கை.

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுதினமான ஜனவரி 25ஆம் தேதியன்று மும்மொழிக் கொள்கை குறித்து ஆளுநர் ரவி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல நீட் தேர்வுக்கு பின் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் விகிதம் அதிகம் ஆனதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறிக்கை முழுக்க முழுக்க பாஜகவின் கொள்கைகளை அடியொற்றி இருந்ததாகவும், ஆளுநர் என்பவர் பொதுவானவர் இவ்வாறு மத்திய அரசின் கொள்கைப் பரப்பு செயலாளராக செயல்படக் கூடாது என விமர்சித்தனர்.

இச்சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, "கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் விமர்சன கட்டுரையை எழுதியுள்ளது. அதில், "குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி, அவர் தமது பொறுப்புணராது தமிழக மக்கள் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும்போது அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது, சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணரவேண்டும். பல பிரச்னைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். 

அதிலே ஒன்று இருமொழிக் கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாமென்பது. ஆளுநர் ரவி, இதனை உணர்ந்து உரிய தகவல்களை மேலிடத்திற்கு தந்து ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்யவேண்டும். இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், `கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா’ எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புவகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.