×

"அது உங்க பிரச்சின குமாரு" - ஓபிஎஸ் மகன் கோரிக்கை... மத்திய அமைச்சர் சூசக பதில்!

 

அண்மையில் தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டன. டெல்டாவில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. சென்னையிலோ மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் மழையால் பலரின் வீடுகள் சேதமடைந்தன. சில வீடுகள் வாழ தகுதியற்ற வகையில் முற்றிலும் இடிந்து விழுந்தன. இதற்கெல்லாம் நிவாரணம் வழங்க நிதி அதிகம் தேவைப்படுவதால், மத்திய அரசை அணுகியது தமிழ்நாடு அரசு.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர்கள் தரப்பில் எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை. இதனால் திமுக அரசு கடும் அதிருப்தியில் உள்ளது. இதனிடையே அதிமுக எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமார் குளிர்கால கூட்டத்தொடரின்போது இதுகுறித்து கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை கூறிய அவர், மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு உடனடி இடைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றார். இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்.

அவரின் பதில் கடிதத்தில், "பேரிடர் மேலாண்மைக்கான முதன்மை பொறுப்பு மாநில அரசையே சாரும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசுகள் பேரிடர் காலங்களில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கடுமையான இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மத்திய அமைச்சக குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் நிவாரண நிதியானது தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசால் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 2021-2022 பேரிடர் மேலாண்மை நிதியாக தமிழ்நாடு அரசிற்கு ரூ.1088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இதில் ரூ.816 கோடி மத்திய அரசின் பங்கு. எஞ்சிய நிதி மாநில அரசின் பங்கு. 2 தவணைகளாக ரூ.408 கோடி வீதம் மத்திய அரசு விடுவித்துவிட்டது. தமிழ்நாடு கனமழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக மத்திய அரசு ஒரு மத்திய அமைச்சகக் குழுவை அமைத்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழு நவம்பர் 21 முதல் 24 ஆம் தேதி வரை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது. அறிக்கை கிடைத்தவுடன் கூடுதல் நிதி உதவி ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனைத்து ஆதரவினையும் வழங்கும் என்று நான் தங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.