×

"ஜார்கண்டை பாத்து கத்துக்கோங்க" - தமிழக அரசுக்கு மநீம அட்வைஸ்!

 

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவந்தது. பெட்ரோலின் விலை 110 ரூபாயை தாண்டி செல்ல, வரலாற்றில் முதன்முறையாக டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க சாமன்ய மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதால் அடுத்த நாளே விலையைக் குறைத்தது. 

இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களிலும் மாநில வாட் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆளாத மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை. இருப்பினும் ஒருசில பாஜக ஆளாத மாநில அரசுகள் விலையைக் குறைத்து வருகின்றன. மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே பெட்ரோல் விலையை 3 ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு அரசு குறைத்திருந்தது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலமும் விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் பெட்ரோலுக்கான விலையை மட்டும் 25 ரூபாய் குறைத்தது.

இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில், "தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்க்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.