×

"இப்போலாம் பேசுறதே இல்ல"... குறை சொன்ன அழகிரி - மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் சுடசுட பதில்!

 

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனின் மகள் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளில் இருந்தும் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய அழகிரி, "முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் பேசுவதைக் குறைத்துவிட்டார்.


 
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக அவர் குறைத்துப் பேசுவதில் தவறில்லை. இருந்தாலும் கூட, நண்பர்களோடும், தங்களை போன்ற தோழமைக் கட்சிகளோடும் மட்டுமாவது முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும். இந்தக் கருத்தை பொதுமேடையில் கூற வேண்டும் என்ற அவசியம் தனக்கில்லை என்றாலும் நட்பு கருதி இதனை சொல்கிறேன்” என்றார். அவர் குறைப்பட்டு கொண்டவுடனே முதலமைச்சர் ஸ்டாலின் சுடச்சுட விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.

தன்னுடைய முறை வரும்போது பேசிய அவர், "முதலமைச்சர் அதிகம் பேசுவதில்லை என கே.எஸ்.அழகிரி வருத்தப்பட்டார். பேசுவதைக் குறைத்து செயலில் திறமையைக் காட்ட வேண்டும் என நான் நினைக்கிறேன். அதனால் தான் நான் அதிகம் பேசுவதில்லை. மற்றபடி வேறு எந்த உள்காரணமும் கிடையாது. எல்லோரும் என்னை இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்றும் நம்பர் 1 முதலமைச்சர் என்றும் பாராட்டுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நம்பர் 1 மாநிலமாக தமிழகம் வர வேண்டும். அதனை இலக்காகக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்” என்றார்.