×

பொதுக்குழுவுக்கு போட்டி... அப்பா- மகன் மோதலால் சிதறும் பாமக!

 

ராமர் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி நான் இருக்கும் இடமே பாமக, தைலாபுரம்தான் பாமகவின் தலைமை இடம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது எனவும், நானே பாமகவுக்கு தலைவர் என்றும் ராமதாஸ் கூறிவருகிறார். அதேசமயம் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைபெறவுள்ள அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார்.

இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஏதோ ஒரு கார்ப்பரேட் அமைப்பால் ஆகஸ்டு 9-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; ஏனெனில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலின்றி கூட்டப்படும் கூட்டம். ராமர் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி நான் இருக்கும் இடமே பாமக, தைலாபுரம்தான் பாமகவின் தலைமை இடம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஆக.17ம் தேதி நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழுவில் உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலின்றி அன்புமணி மட்டும் கூட்டும் பொதுக்குழு சட்டவிரோதமானது, அதற்கும் பாமகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். அதேநேரம் கட்சி விதி, 15ன் படி தேர்வு செய்யப்பட்ட மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுவே சட்டப்படியான அங்கீகாரம் பெற்றது என அன்புமணி ராமதாஸ் தரப்பு பதிலடி கூறியுள்ளது.