×

ஆகஸ்ட் 21... ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் இணைந்த இந்த நாள்! நினைவுக்கூர்ந்த மைத்ரேயன்

 

அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளரானார் சசிகலா. அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று சசிகலா பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் இரண்டாக பிரிந்தது. 

அந்த சூழலில்தான் ஜெயலலிதா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென 2017 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதனையடுத்து மார்ச் 23 ஆம் தேதியன்று அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனையடுத்து ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர். இதனிடையே ஆர்.கே. நகர் தேர்தலில் லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனும், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் கைதாகினர். 

 


இதனையடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் இரு அணிகளும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இணைந்தன. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், “5 ஆண்டுகளுக்கு முன் இன்று 21/08/2017 அணிகள் இணைந்தன. 5ஆண்டுகளுக்குப் பின் திருப்புமுனையில் நிற்கிறோம்.தலைவர் பாடல் நினைவுக்கு வருகிறது.நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்.,. பார்த்தால் பார்வைக்கு தெரியாது...தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது ...” எனக் கூறினார்.