×

"இதுவே எடப்பாடியின் வாடிக்கை; டேட்டா இருக்கா?" - அமைச்சர் மா.சு. பதிலடி!

 

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் பொருட்டு அதிமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் ஆகிய  திட்டங்களுடன் அம்மா மருந்தகங்களும் மூடப்படுவது கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்தார்.

அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான திமுக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிதிச்சுமையைக் காரணம் காட்டாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அம்மா மருந்தகங்களைச் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது அதிகளவில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புள்ளிவிவரங்கள் இல்லாமலே அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. திமுக ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 41 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நான் முன்னாள் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கொண்டுவந்த அம்மா மருந்தகங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தை அளிக்க முடியுமா?” என்றார்.