×

உன் போட்டோவுக்கு மாலை போட்டால்... செய்தியாளர்களை ஒருமையில் திட்டிய கேபி ராமலிங்கம்

 

தேசத்தின் நலனுக்கு எந்த எல்லை வரை செல்லவும் அத்து மீறவும் தயார் என பாஜக முன்னாள் எம்பியும், மாநிலத் துணைத்தலைவருமான கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேபி ராமலிங்கம், “தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலுள்ள பாரதமாதா நினைவாலயத்தின் பெயரினை, நினைவாலயம் என்பதற்கு பதிலாக ஆலயம் என தமிழக அரசு மாற்றவேண்டும்.. இதனை வலியுறுத்தி முதலில் பொதுக்கூட்டமும், பின்னர் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம். தேசத்தின் நலனுக்காக எந்த எல்லை வரை செல்லவும், அத்து மீறவும் தயார்.  தமிழக அரசு காவல்துறையை வைத்து மிரட்டி பார்ப்பதும், அச்சுறுத்துவதும், அடக்குமுறையை பாஜக மீது ஏவவும் நினைத்தால், தேசியத்தை பாதுகாக்க, பிரிவினைவாதத்தை தடுத்திட எதை பற்றியும் கவலைபடாமல் போராட்டத்தை தொடருவோம்” எனக் கூறினார்.

அதிமுக ஆட்சி காலத்தில் நினைவாலயம் என பெயரிடடப்பட்டது, கூட்டணியில் இருந்த உங்களுக்கு அப்போது தெரியவில்லையா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே.பி.ராமலிங்கம், அவர்கள் முட்டாள் அப்படி பெயரிட்டுவிட்டார்கள், அது தவறு என எனக்கு தோன்றுகிறது .. நீங்கள் அறவாளிகள் தானே பெயரை மாற்றுங்கள் என தமிழக அரசை குறிப்பிட்டு பதலளித்தார். தொடர்ந்து பாரதமாதா நினைவாலயம் தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒருவரை பார்த்து உன்னுடய படம் இருக்கிறது, சிறந்த பத்திரிக்கையினுடைய நிருபர், உன் போட்டோவிற்கு மாலை போட்டால் நீ  ஏற்றுகொள்வாயா? என ஒருமையில் பேசினார்.