×

அதிமுகவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொது செயலாளர் பதவி இல்லை - கோவை செல்வராஜ்

 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தான் இப்போதும் தலைமை பொறுப்பில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரும் , அதிமுகவின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “கொடநாட்டில் நாங்கள் வணங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அவரது மறைவுக்கு பிறகு  ஐந்து கொலை நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு இருக்கிறது. கட்சியின் கட்டுப்பாடு விதிகளுக்காக சட்டமன்றத்தில் கொடநாடு வழக்கு குறித்து பேசியதற்காக அனைவரும் வெளிநாடுப்பு செய்தோம். அந்த கொலை சம்பவம் நடைபெற்ற பிறகு கொடநாடு வீட்டில் காவல்துறை பாதுகாப்பு இல்லை. அது ஒரு தனியார் சொகுசு வீடு அதனால் அங்கு காவல்துறை பாதுகாப்பு தர முடியாது.

தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனே கொடநாடு கொலை வழக்கு சம்பவத்தை உடனடியாக விசாரிப்பேன். ஆனால் இன்னும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக கொடநாடு கொலை வழக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக விசாரித்து குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தான் இப்போதும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொது செயலாளர் என்ற பதவி இல்லை” எனக் கூறினார்.