×

சட்டத்தை இயற்றியவர்கள் அந்த சட்டத்தை தினமும் மீறுவதை நான் கண்டால், நான் என்ன  செய்வது?.. கேரள கவர்னர் ஆதங்கம்

 

சட்டத்தை இயற்றியவர்கள் அந்த சட்டத்தை தினமும் மீறுவதை நான் கண்டால், நான் என்ன  செய்வது? என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கடந்த மாதம் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன், இந்த சூழலில் என்னால் வேலை செய்ய முடியாது. பல்கலைக்கழகத்தின் சுயாட்சி முற்றிலும் பறிக்கப்படுகிறது. வேறு சில அதிகாரங்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தை வலியுறுத்தும்போது மோதல் வரும். எனவே நீங்கள் (பினராயி விஜயன்)  ஒரு அவசர சட்டத்தை (பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரங்களை முதல்வரிடம் ஒப்படைப்பதற்கான  அவசர சட்டம்) கொண்டு வருமாறு எழுதியிருந்தார்.

ஆனால் கவர்னர் ஆரிப் முகமது கானின் குற்றச்சாட்டை முதல்வர் பினராயி விஜயன் அரசு மறுத்தது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ராஜினாமா செய்யும் கவர்னர் ஆரிப் முகமது கான் முடிவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்தார்.  ஆனால் இதனை கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இது தொடர்பாக கூறியதாவது: அது (பல்கலைக்கழக வேந்தர் பதவி) எனது அரசியலமைப்பு கடமையின் ஒரு பகுதியாக இருந்தால், நான் குற்றம் சாட்டப்படலாம் ஆனால் அது இல்லை. கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்த கடமையை எனக்கு வழங்கியுள்ளது. சட்டத்தை இயற்றியவர்கள் அந்த சட்டத்தை தினமும் மீறுவதை நான் கண்டால், நான் என்ன  செய்வது?. நிச்சயமாக ஏதோ நடந்துள்ளது, இதனால் நான் (பல்கலைக்கழங்களின் வேந்தராக) தொடர விரும்பவில்லை என்று இந்த முடிவை எடுத்தேன். ஆனால்  அது (காரணம்) தேசிய  நிறுவனங்களை உள்ளடக்கியதால் நான்  அதை பற்றி விவாதிக்க மாட்டேன்.