×

"பிரதமரை வரவேற்பது அரசின் கடமை; அதில் என்ன தவறு?" - கனிமொழி எம்பியின் "அடடே" விளக்கம்!

 

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது. இச்சூழலில் சமீபத்தில் டெல்லியில் நடந்த அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டார்.

அப்போது 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 800 மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  அவரின் தொடர் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம், கூடுதலாக 600 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையொட்டி 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி வரும்போது கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என திமுக அமைப்புச் செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதனால் எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி, பலூன் விட்ட திமுக, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மத்திய அரசிடம் பணிந்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது.

இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விளக்கம் கொடுத்துள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாநில அரசின் திட்டங்களை தொடங்க வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நமது கடமையாகும், அரசியல் கருத்தியல் என்பது வேறு. சென்ற அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் எதையும் திமுக என்றும் ஏற்றுக்கொள்ளாது. மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் ஒருபோதும் ஆதரிக்காது" என்றார்.