காங்கிரஸ் செய்யவில்லை.. பிரதமர் மோடி அதை விவசாயிகளுக்கு கொடுத்தார்.. ஜே.பி. நட்டா தகவல்
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்ததை முந்தைய காங்கிரஸ் அரசு அதை செயல்படுத்தவில்லை, அதை பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வழங்கினார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் மீரட்டில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசியதாவது: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.1.41 லட்சம் கோடி வழங்கியது. கடந்த அரசாங்கத்தின் பாக்கிகளும் வழங்கப்பட்டது. கரும்பு எங்களுடையது, ஜின்னா அவர்களுடையது. நாங்கள் கரும்பில் போட்டியிட்டு வெல்வோம், அவர்களின் ஜின்னா மனநிலையை அம்பலப்படுத்துவோம். பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது, மாநிலத்தில் 20 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. முந்தைய சமாஜ்வாடி கட்சி அரசாங்கத்தில் 11 சர்க்கரை ஆலைகள் செயல்பாட்டை நிறுத்தின.
விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக வழங்க வேண்டும் என்று சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. அதை பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வழங்கினார். முன்பு விவசாயிகள் யூரியாவை பெற முயன்றபோது அவர்கள் தடியடி வாங்கினர். ஆனாலும் அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. பிரதமரின் மோடியின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கு யூரியா எளிதாக கிடைக்கிறது. முந்தைய சமாஜ்வாடி ஆட்சியில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தன, 112 பேர் கொல்லப்பட்டனர்.
நாங்கள் ஜனநாயகத்தை வழிபடுபவர்கள், அவர்கள் (சமாஜ்வாடி) கலவரக்காரர்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது மக்களின் உயிரை பிரதமர் மோடி காப்பாற்றினார். அமெரிக்கா போன்ற நாடு கூட, உயிர்களை காப்பாற்றுவதா அல்லது மந்தநிலையிலிருந்து தப்பிப்பதா என்பதை தீர்மானிக்க முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது, அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் தொண்டர்களும் தனிமைப்படுத்தலுக்கு சென்றனர். ஆனால் பா.ஜ.க. தொண்டர்கள் மக்களுக்கு சேவை செய்ய தங்கள் வாழ்க்கையை வைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.