×

#HBDJayalalitha: ஜெயலலிதா இஸ் தி ரியல் பீனிக்ஸ்!

சாதாரண குடும்பத்தில் பிறந்து தேசத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக உயர்ந்ததில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாவே. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நெஞ்சில் நீங்கா காதலியாக இடம்பிடித்தவர். அம்மாவாக இன்றும் நிலைத்திருப்பவர். என்றும் நிலைத்திருப்பார். பொதுவாக அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோச்சுவார்கள் என்று பிம்பத்தைச் சுக்குநூறாக்கியவர். அரசியலில் ஊறுகாய் அளவுக்குக் கூட பெண்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆணாதிக்க நெருப்பாற்றலில் நீந்தி பல கோடி பெண்களை அதிகார மையத்தை நோக்கி இழுத்துச்சென்ற பேராற்றல் அவர். அதிகாரத்தை நுகர
 

சாதாரண குடும்பத்தில் பிறந்து தேசத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக உயர்ந்ததில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாவே. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நெஞ்சில் நீங்கா காதலியாக இடம்பிடித்தவர். அம்மாவாக இன்றும் நிலைத்திருப்பவர். என்றும் நிலைத்திருப்பார். பொதுவாக அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோச்சுவார்கள் என்று பிம்பத்தைச் சுக்குநூறாக்கியவர். அரசியலில் ஊறுகாய் அளவுக்குக் கூட பெண்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆணாதிக்க நெருப்பாற்றலில் நீந்தி பல கோடி பெண்களை அதிகார மையத்தை நோக்கி இழுத்துச்சென்ற பேராற்றல் அவர். அதிகாரத்தை நுகர துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆகச்சிறந்த வினையூக்கி.

வாய்ப்புகள் கிடைப்பது அரிதினும் அரிது. கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதில் கோலோச்சி சாதிக்க வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே பெரிய இன்ஸ்பிரேஷன். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற திருநாவுக்கரசர் வரிகளின் நிகழ்கால உதாரணம் ஜெயலலிதா. குடும்பச் சூழல் காரணமாக சினிமாவுக்குள் நுழைந்து கஷ்டப்பட்டு அரசியலில் சாதித்து தனது திட்டங்களால் பல பேரின் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைத்தவர்.

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தவருக்கு கை வைத்தது எல்லாம் பொன் தான். அவர் நடித்த 90 சதவீத படங்கள் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் வகையறா தான். அதேபோல எம்ஜிஆருடன் கைகோத்து திரையில் நிகழ்த்திய மாயஜாலங்கள் அனைத்தும் இன்றளவும் அவரின் புகழை மெச்சுகின்றன. அவர் எப்பேர்பட்ட தேர்ந்த நடிகை என்பதற்கு அவர் நடித்த 127 படங்கள் தான் அத்தாட்சி. இப்படியாக நடித்து வந்தவருக்கு அரசியல் ஆசையும் எழாமல் இல்லை. தனது ஆசையை எம்ஜிஆரிடம் கூற மிகச் சாதாரணமாக 1982ஆம் ஆண்டு அரசியலுக்குள் கால்தடத்தைப் பதித்தார். அப்போது எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் இப்பெண்மணி தான் நாளை நம்மை ஆளப் போகிறார் என்று.

1983ஆம் ஆண்டு கொள்கைப் பரப்புச் செயலாளராகி 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவு வரை அரசியலில் பால பாடங்களைக் கற்றுக்கொண்டவருக்கு, அடுத்து அவர் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி தான். அரசியலில் அனாதையாக்கி விடப்பட்ட அவரை இகழாதோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தனை இழிச்சொற்களையும் உள்வாங்கிக்கொண்டு உள்ளே உரமிட்டு 1989ஆம் ஆண்டு ஆலமரம் போல் விருட்சமாக எழுந்து நின்றார். அதுதான் ஜெயலலிதா. அவர் தான் ஜெயலலிதா.

இழிவாய் பேசிய வாய்கள் அனைத்தும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தபோது விடுமுறைக்குச் சென்றுவிட்டன. அவர் கேட்காமலேயே கைகளுக்குள் அதிமுக எனும் மாபெரும் இயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அன்றிலிருந்து இறக்கும் வரை தனிப்பெரும் பொதுச்செயலாளராக இருந்து அதிமுகவை கட்டிக்காத்தார். அதன்பின் சட்டப்பேரவையில் தாக்கப்பட்டார். முதல்வராகவே உள்ளே நுழைவேன் என்று சபதம் போட்டார். வென்றார். 1991ஆம் ஆண்டு பீடுநடை போட்டு முதல்வர் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் அதில் நியாயம் தர்மம் எதுவும் இல்லை. 1995ஆம் ஆண்டு முதல் அவருக்குச் சறுக்கல் மட்டுமே வாழ்க்கையாக இருந்தது. அடுத்த ஆண்டே நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைய, ஜெயலலிதாவும் தோற்கிறார். கலர் டிவி ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார். பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, டான்சி வழக்கு என அடுத்தடுத்து அவரைத் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

வழக்குகளைக் காரணம் காட்டி 2001ஆம் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட விரும்பிய நான்கு தொகுதிகளுக்கும் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது. அத்தோடு அதிமுகவின் அத்தியாயம் முடிவுற்றதாக முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். அப்படியொரு சமயத்தில் தான் ஜெயலலிதா பங்கேற்காமலேயே அதிமுக அதிரிபுதிரியான வெற்றிபெற முற்றுப்புள்ளிக்குப் பக்கத்தில் இரண்டு புள்ளிகளை வைத்து ‘இது தொடரும்…’ என்ற சமிக்ஞையை விடுத்தார். தி ரியல் பீனிங்ஸ் மொமென்ட் என்றால் அது இதுதான். அவர் தேர்தலில் வெற்றிபெற்றாலும் வழக்குகளில் வெற்றிகொள்ள முடியவில்லை. அவரை விடாது கருப்பாக வழக்குகள் துரத்திக் கொண்டிருந்தன.

2002ஆம் காலக்கட்டத்தில் மக்களிடமும் அவருக்கு இறங்குமுகமே. மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே இரவில் பணிநீக்கம் செய்யப்பட்டது ஆகிய பரபரப்பான சம்பவங்கள் அப்போது தான் அரங்கேறின. ஜெயலலிதாவின் இருண்ட பக்கங்களில் இந்த ஆட்சிக்காலத்துக்கு நிச்சயம் முக்கியப் பங்குண்டு. மக்கள் கொடுத்த தண்டனையால் 5 ஆண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.

2011ஆம் ஆண்டு மீண்டும் முதல்வர், சொத்துக்குவிப்பு வழக்கு, 2016ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி, உடல்நல குறைபாடு இப்படியாக சறுக்கல்களும் வெற்றிகளும் இருந்த வாழ்க்கையாக நகர்ந்தது. இதன் காரணமாகவே பீனிக்ஸ் பறவையை அவருக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர். எத்தனை முறை தீயில் கருகி இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பறவை பீனிக்ஸ். அதேபோல் தான் ஜெயலலிதாவும் அரசியல் எனும் நெருப்பாற்றலில் எத்தனை முறை நீந்த முடியாமல் வீழ்ந்தாரோ அதே சம பலத்துடன் எழுந்து சாதனைகள் புரிந்தார்.

அரசியல் என்ட்ரிக்கு முன் அவர் கடைசியாக நடித்த படம் ‘நதியை தேடிவந்த கடல்’. நதியின் குணம் கடலைத் தேடிச் செல்வது. அப்படியிருக்க ஒரு கடல் எப்படி நதியைத் தேடிவரும். ஜெயலலிதா எனும் நதியைத் தேடி அக்கடல் நிச்சயம் வரும். ஆம், அவர் எந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் மக்கள் எனும் கடல் ஜெயலலிதா எனும் நதியை நோக்கி ஓடோடி வரும். அதே கடல் அவர் இறப்பின்போதும் சென்னையை நோக்கி ஓடோடி வந்ததை எவரும் மறக்க வாய்ப்பில்லை. அப்பெருங்கடல் சிந்திய கண்ணீரும் இப்பூமி உள்ள காலம் வரை காற்றில் கரையப் போவதுமில்லை. ஜெயலலிதா எனும் பீனிக்ஸ் இன்று நம்மை விட்டு அகன்று சென்றுவிட்டாலும், அவர் உருவாக்கிய சாதனைகள் வழியே நம் ஒவ்வொருவரின் மனதிலும் பீனிக்ஸாக உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இஸ் தி ரியல் பீனிக்ஸ்!