×

ஓபிஎஸ் எங்களை கட்சியிலிருந்து நீக்கியது செம காமெடி-ஜெயக்குமார்

 

ஓ.பி.எஸ் தங்களை கட்சியை விட்டு நீக்கியதை காமெடியாக தான் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

பெருந்தலைவர் காமராசரின் 120 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த காமராசரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத் தாளில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு கண்டனத்துக்குரியது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது உயர்க்கல்வித்துறை அமைச்சர் அவருடைய துறையில் கவனம் செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசு புத்திக்கெட்ட அரசாங்கமாக செயல்படுகிறது. ஓ.பி.எஸ் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியை விட்டு ஒருவரை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உள்ளது. ஓ.பி.எஸ் எங்களை கட்சியை விட்டு நீக்கியதை ஒரு காமெடியாக தான் பார்க்கிறோம்” எனக் கூறினார்.

ஓ.பி.எஸ் பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் என அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தற்போது எங்கள் கட்சியில் இல்லை. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? என தெரிவித்தார்.