×

"கடைசில நீங்களும் ஆர்எஸ்எஸ் புத்திய காமிச்சிட்டீங்களே" - ராஜ்நாத் சிங்கை வறுத்தெடுத்த ஜெய்ராம் ரமேஷ்!

 

ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் சரி பாஜகவினரும் சரி குற்றம் சொல்ல வேண்டுமென்றால் முன்னாள் பிரதமர் நேருவை பிடித்துக்கொள்வார்கள். எதாவது வரலாற்றை திரிக்க வேண்டுமென்றால் காந்தி சொன்னதாக கூறுவார்கள். நம்மூரில் சமூக வலைதளங்களில் ஒருசிலர் தாங்கள் எதையாவது கிறுக்கிவிட்டு, இது அப்துல் கலாம் சொன்னது என அவருடைய பெயரை கீழே போட்டுவிடுவார்கள். நம்மாட்களும் அதை நம்பி மோட்டிவேஷனலாக ஷேர் செய்து கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட இதே பாணியில் தான் வரலாற்றை திரிப்பார்கள் பாஜகவினர்.

அவர்களின் சமீபத்திய உருட்டு தான் காந்தி சொல்லி தான் சோ கால்டு "வீரமான" சாவர்க்கர் கருணை மனு எழுதினார் என்பது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அனைத்தையும் எளிதாக தேடி கண்டுபிடிக்கக் கூடிய காலக்கட்டத்தில் இருந்துகொண்டே வாய் கூசாமல் அடித்து விடுகிறார்கள். இதனை ஒரு பாதுகாப்பு துறை அமைச்சரே சொல்லியிருப்பது தான் ஹைலைட். சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "வீர சாவர்க்கர் தேசியத்தின் அடையாளம். 

நாட்டுக்காக பாதுகாப்பை வலியுறுத்துவதும், ராஜதந்திர வியூகம் வகுத்ததிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் இந்திய வரலாற்றின் அடையாளமாக என்றென்றும் நினைவுக்கூரப்படுவார். கம்யுனிச சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரை பாசிஸ்ட் என்று சொல்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தீவிர தேசியவாதி. சாவர்க்கர் ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு கருணை மனு கொடுத்தார் என்பது தவறான பிரச்சாரம். மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் அவர் கருணை மனு எழுதினார்” என்றார். 

எந்தவொரு பொய்யும் உண்மையாக வேண்டுமென்றால் அதில் கொஞ்சம் உண்மை இருக்க வேண்டுமல்லவா? ஆம் இதிலும் உண்மை இருக்கிறது. காந்தி கருணை மனு எழுத சொன்னது உண்மை தான். அது 1920ஆம் ஆண்டு. ஆனால் சாவர்க்கரின் முதல் கருணை மனு எழுதப்பட்ட ஆண்டு 1911. நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சனின் கொலை தொடர்பாக சாவர்க்கரின் சகோதரர் தாமோதர் 1910ஆம் ஆண்டு கைது செய்யப்படுகிறார். தூண்டிவிட்டதாகக் கூறி லண்டனில் சாவர்க்கர் கைது செய்யப்படுகிறார். 

அதற்குப் பிறகு 1911ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்தமானிலுள்ள சிற்றறை சிறையில் அடைக்கப்படுகிறார்.  அங்கு சென்ற ஆறு மாதத்திலேயே கருணை மனு எழுதுகிறார். இதைப் போலவே 9 ஆண்டுகளில் 6 மன்னிப்பு கடிதங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. கிட்டத்தட்ட அவர் சிறை சென்று 9 ஆண்டுகளுக்குப் பிறகே காந்தி எழுத சொல்லியிருக்கிறார். ஆனால் சாவர்க்கர் ஏதோ போன போகுது காந்தி சொல்கிறார் என்று கருணை மனு எழுதியதாக ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். 


இது தான் வரலாற்றை திரிக்கும் வேலை. ராஜ்நாத் சிங்கின் இந்தக் கருத்து பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.  இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மோடி அரசாங்கத்தில் கண்ணியமிக்கவர்களில் ராஜ்நாத் சிங்கும் ஒருவர். ஆனால் அவரும் மற்ற ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு விதிவிலக்கானவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வரலாற்றை திரித்திருக்கிறார்”, குறிப்பிட்டு சாவர்க்கருக்கு காந்தி எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார்.