×

தனிமாநில முயற்சியா ‘மேற்கு தமிழகம் கட்சி’ உதயம்?

 

 வட தமிழ்நாடு மக்கள் கட்சி,  தென் தமிழ்நாடு மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியைப் போல ‘மேற்கு தமிழகம் கட்சி’யை தொடங்கி இருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்.  கடந்த 15ஆம் தேதியன்று திருப்பூரில் கட்சியின் முதல் பொதுக்குழுவைக்யும் கூட்டி இருக்கிறார் மணிகண்டன்.

கொங்குநாடு தனிநாடு என்ற முழக்கத்தை முன்வைத்திருந்த  பொங்கலூர் மணிகண்டன், மேற்கு தமிழகம் என்று கட்சிக்கு பெயர் வைத்திருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.

கவுண்டர் சாதி அடையாளத்தோடு கொங்கு பகுதியில் பிரபலமாக இருந்தவர் பொங்கலூர் மணிகண்டன்.   விவசாய சங்கங்களின் இயங்கிவந்த பொங்கலூர் மணிகண்டன்,  கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையில் தீவிரமாக இயங்கி வந்தார்.   அதன்பின்னர் கலப்பு திருமண எதிர்ப்பு இயக்கம் என்ற இயக்கத்தை கரூரில் தொடங்கியிருந்தார்.  அதன் பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கிய அனைத்து சமுதாய இயக்கத்தின் இணைந்திருந்தார்.

 அதையடுத்து பாமக மாநில துணைத் தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டுவந்த மணிகண்டன் அக்கட்சியிலிருந்து வெளியேறி உழவர் உழைப்பாளர் சங்கம் என்பதை நிறுவி இயங்கி வந்தார்.  

 கொங்கு நாடு என்ற தனிநாடு என்ற முழக்கம் எழுந்தபோது அதை வரவேற்று கொங்கு நாடு தனி நாடு என்ற முழக்கத்தை முன் வைத்தவர் பொங்கலூர் மணிகண்டன். தற்போது அவர் புதிய கட்சியை கொங்கு நாடு என்ற பெயரில் ஆரம்பிக்காமல் மேற்கு தமிழகம் கட்சி என்று தொடங்கியிருக்கிறார்

  கொங்கு பகுதியில் என்று சொன்னாலே கொங்கு வேளாளர் கவுண்டர்கள் என்று தான் நினைக்கிறார்கள். , ஆனால் அப்பகுதியில் அருந்ததியர்கள் நாடார்கள் முதலியார்கள் இன்னும் பல சமுதாயத்தினர் இருக்கிறார்கள்.  கொங்கு என்றாலே கொங்கு வேளாளர் கவுண்டர்களை மட்டுமே குறிப்பதால் மேற்கு தமிழகம் கட்சிக்கு பெயர் வைத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சியை பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் வாங்கிவிட்டார் மணிகண்டன்.

கொங்குநாடு என்று அழைக்கப்படும் கோவை,  திருப்பூர்,  நாமக்கல், கரூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி தமிழகத்திலிருந்து கொங்கு மண்டலப்  பகுதிகளை ஒருங்கிணைத்து தனிமாநிலமாக்க முயற்சியில் உதயமாகி இருக்கிறது ’மேற்கு தமிழகம்’ என்று கூறப்படுகிறது.