×

நீதிபதி சி.வி.சண்முகம் ஆளா? நிச்சயம் வழக்கு தொடர்வேன்- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

 

அதிமுக வழக்கை விசாரிக்கும் நீதிபதி நான் வைத்தவர்தான் நமக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம் பேசி இருந்த நிலையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்  கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் அருகே உள்ள இருக்கையில் ஏன் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பளித்தீர்கள் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பினார். அவர்  எதிர்க்கட்சித் தலைவர் ஆனதற்கு முக்கிய காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான். A,B, விண்ணப்ப படிவத்தில் ஓ.பி.எஸ்.கையெழுத்து போட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஈ.பி.எஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு ஓ.பி.எஸ் தான் காரணம்.

தொண்டர்கள் மற்றும் நீதிபதியை நம்பி தான் இருக்கிறோம். ஆனால் நீதிபதி நான் வைத்தவர்தான், நமக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் பேசி இருக்கிறார். சி.வி.சண்முகம் நிச்சியம் மீது வழக்கு தொடருவேன். அதிமுக விதி எண் 35 படி ஒருங்கிணைப்பாளரை நீக்க முடியாது, இது ஒரு குருடனுக்கு கூட தெரிந்த விஷயம். தேர்தல் ஆணையத்தில்  தற்போது வரை  பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளராக  உள்ளார். இதுவரை தேர்தல் அதிகாரிகள் யாரும் அவரை நீக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ, பன்னீர்செல்வம் அருகில் அமருவதற்கு தகுதியே இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. மறைந்த  முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியில் அமர யாருக்கும் தகுதி இல்லை.

முடிந்தால் வாருங்கள் மக்கள் மன்றத்தில் சந்திப்போம், கூவத்தூரில் நடந்த சம்பவத்தில் சசிகலா போட்ட பிச்சையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து வந்து பதவியை பெற்றார்” எனக் குற்றஞ்சாட்டினார்.