☰
×

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல்- ஈபிஎஸ்க்கு நத்தம் விஸ்வநாதன் எச்சரிக்கை 

 

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தாமரை இலைத் தண்ணீர் போல் தனித்தனியாக இருப்பதாகவும், கட்சியில் ஒற்றுமை இருப்பதாக கூறப்படுவது உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிடித்தவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை நடத்த நினைத்தால், அதன் விளைவை தலைமையே சந்திக்க நேரிடும் என நத்தம் விஸ்வநாதன் கடுமையாக கூறியுள்ளார். அனைவரையும் அரவணைத்து செல்லாவிட்டால் அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திமுக ஆதரவுடன் முதல்வராக எடப்பாடி பழனிசாமி முயன்றதாக நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த அணுகுமுறை பிடிக்காததால் தான் சிலர் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஒருபக்கம் தலைமை, மறுபக்கம் எதிர்ப்பு என அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.