×

ஜாட் தலைவர்களை சந்தித்த அமித் ஷா.. அகிலேஷ் யாதவ் கூட்டணி கட்சியை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க.

 

மேற்கு உத்தர பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தின் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.

உத்தர பிரதேசத்தில் மேற்கு உத்தர பிரதேசததில் ஜாட் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள், 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஜாட் சமுதாயத்தினர் பா.ஜ.க.வுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாட் சமுதாயத்தினர் ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டத்தால் பா.ஜ.க. மீது ஜாட் சமுதாயத்துக்கு அதிருப்தி ஏற்பட்டது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் பா.ஜ.க. மீதான அதிருப்தி தொடர்ந்தது.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு உத்தர பிரதேச பகுதியில் தான் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று ஜாட் சமுதாய தலைவர்களை அழைத்து பேசினார். இந்த சந்திப்பு டெல்லியில் பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சர்மாவின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சஞ்சீவ் பல்யாண், உ.பி. அமைச்சர் பூபேந்திர சவுத்ரி மற்றும் ஜாட் சமூகத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமித் ஷா-ஜாட் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜாட் சமூக தலைவர்கள் ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரியிடம் பேசுவார்கள். அவருக்காக பா.ஜ.க.வின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆர்.எல்.டி. தலைவர் ஜெயந்த் சவுத்ரி சமாஜ்வாடி கூட்டணியில் உள்ளார். தற்போது அவரை  ஜாட் தலைவர்கள் வாயிலாக தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. ஜெயந்த் சவுத்ரி ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். இவர் சமாஜ்வாடி கூட்டணியில் இருப்பதால் ஜாட் வாக்குகள் பிரியக்கூடும் ஆகையால், ஜெயந்த் சவுத்ரியை தங்களம் பக்கம் இழுக்கும் வேலைகளை பா.ஜ.க. செய்ய தொடங்கியுள்ளது.