×

"பாவத்த அனுபவிப்பீங்க" - கொதித்து பேசிய எடப்பாடி... ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த முதல்வர்!

 

இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அம்மா கிளினிக்குகள் அனைத்தும் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் ஒரு வருட காலத்துக்கு தற்காலிகமாக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கும் போது 1,800 டாக்டர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது” என்றார்.

இது அதிமுக தலைவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் கொதித்து போய் அறிக்கை வெளியிட்டனர். இதனிடையே நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரை தொடங்கவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே அம்மா கிளினிக் மூடப்பட்ட விவகாரத்தை முன்னிறுத்தி எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் இரண்டாம் நாளான இன்று அனைவரும் கேள்வி நேரத்தில் கலந்துகொண்டனர். அப்போது அம்மா கிளினிக், அம்மா உணவகம் குறித்த கேள்வியெழுப்பப்பட்டது.

விவாதத்தை ஆரம்பித்த எடப்பாடி, "கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இது கண்டனத்துக்குரியது” என்றார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன்,  “அம்மா உணவத்தை மூடினால்தான் என்ன..? நீங்கள் கலைஞர் பெயரிலான எத்தனை திட்டங்களை மூடினீர்கள்?” என்றார்.

மேலும் அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட திமுக திட்டங்களை ஆவேசமாக பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அம்மா உணவகத்தை மூடினால், அதற்கான பாவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்” என கொந்தளித்தார். அப்போது ஆவேசமாக எழுந்த முதலமைச்சர் ஸ்டாலினோ, "கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள்” என்றார்.