×

குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான சட்டம் சாத்தியமில்லை... உண்மையை போட்டு உடைத்த மனோகர் லால் கட்டார் 

 

குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) மீதான சட்டம் சாத்தியமில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

2020 நவம்பர் முதல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வந்தனர். விவசாயிகளின் போராட்ட உறுதியை பார்த்த மத்திய அரசு அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை உருவாக்குவது அல்லது இயற்றுவது சாத்தியமில்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை மனோகர் லால் கட்டார் சந்தித்தார். அப்போது மனோகர் லால் கட்டார் கூறியதாவது: இதுவரை குறைந்தபட்ச ஆதரவு விலையை முறைப்படுத்துவது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

விவசாய துறை பொருளாதார நிபுணர்களும் மாறுப்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். இதற்கான சட்டத்தை உருவாக்குவது சாத்தியமாக தெரியவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) மீதான சட்டம் சாத்தியமில்லை. ஏனெனில் இது தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அவர்களின் விளைபொருட்களை வாங்கவில்லை என்றால், அதை அரசாங்கமே வாங்க என்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு வரும். அரசாங்கத்துக்கு இவ்வளவு தேவை இல்லை. அதற்கான அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை. நாங்கள் (அரசாங்கங்கள்) தேவைக்கேற்ப மட்டுமே வாங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.