×

"இந்துக்கள்னா நக்கலா போச்சா; ஜாக்கிரதை" - ஹெச்.ராஜா ஆவேசம்!

 

பாஜக தலைவர் ஹெச்.ராஜா 2018ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை,  அவர்களது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசினார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராக அங்கு வந்திருந்தார் ஹெச்.ராஜா. விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கோயில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது கோயிலில் அத்துமீறி செயல்பட்டால், ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும்  எத்தனை பொய் வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன். திமுக அரசு, கோயிலை கொள்ளை அடிக்க கூடாது. அறநிலையத் துறை அசுரக் கூட்டம்  கோயில்களை பூட்டுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் உள்ளது. கோயில்களை பூட்டுவதற்கு நீங்கள் யார்?

ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவத்தை காட்டியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அந்தோணிசாமி என்ற பெயரை குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்க கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்றார்.