×

"அதை தடுத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு கேடு வந்துரும்” - சாபம் விட்ட ஹெச்.ராஜா!

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர், தரிசன விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைத் தீய சக்திகள் அபகரிக்க பல்வேறு முறை முயற்சி செய்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து கோயில்களை இடித்து வருகிறார்கள். தில்லை நடராஜர் கோயில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கிறார்கள்.

தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். நடராஜர் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் தொற்று பரவுமா? பாஜகவினர், இந்து மக்கள் போராடியாவது தேர் திருவிழாவை நடத்திக் காட்ட வேண்டும். தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் மன்னனுக்குக் கேடு என சொல்லப்பட்டுள்ளது. தற்போது மன்னர் என்றால் முதலமைச்சர் தான்” என்றார். அவரிடம் அண்ணாமலையை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஹெச். ராஜா, கள்ளச் சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் சென்ற காந்தி அமைச்சராக இருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு அடுத்த நிமிடமே அவர் புட்டுபுட்டு வைத்துவிட்டார். கோயில் நிலத்தைக் காப்பாற்றாமல் கொள்ளை அடிக்கும் துறை தான் அறநிலையத் துறை. இந்து விரோத ஸ்டாலின் அரசு ஒவ்வொரு நாளும் இந்து கோயில்களை எடுக்க வேண்டுமென மிரட்டுகிறது. இந்து மதத்திற்கு விரோதமாகச் செயல்படாதீர்கள். அதனைத் தோலுரித்துக் காட்டுவேன்” என்றார்.