×

"மாட்டை அடிப்பது போல் அடித்து விரட்டுவோம்" - ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதிலடி!

 

மிஷனரிகள் என்றால் மதத்தைப் பரப்பும் மையங்கள், மதமாற்றம் செய்யும் முகாம்கள் என்ற தட்டையான புரிதலே நிலவுகிறது. ஆனால் அந்த மிஷனரிகளால் இந்தியா அடைந்த உயரங்கள் பல. மிஷனரிகள் நடத்தும் பள்ளிகள் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் படித்து பயனுறுகின்றனர். அவர்கள் நடத்தும் அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், சொந்த உறவினர்களே ஒதுக்கிவைக்கும்  நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் அறக்கட்டளைகள் என பல்வேறு தொண்டுகளைச் செய்து வருகின்றன. 

அந்த வகையில் அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. இந்த மிஷனரி குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்ட ட்வீட் பெரும் புயலை கிளப்பியது. சாரிட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் மத்திய அரசு கிறிஸ்துமஸ் நாளில் முடக்கிவிட்டது. இதனால் 22,000 பேர் உணவும் மருந்துகளும் இல்லாமல் பரிதவிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. அரசு தரப்பில் சாரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என்று சொன்னது. 

அந்நிய பணபரிவர்த்தனை சான்றிதழை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக சாரிட்டி தான் வங்கி கணக்குகளை நிறுத்திவைக்க சொன்னதாகவும் கூறியது. இதனை குறிப்பிட்டு ப.சிதம்பரம் பதிவிட்ட ட்வீட்டில், . இஸ்லாமியர்கள்  முதலில் குறிவைக்கப்பட்டார்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள் என்று விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.


அதற்கு அவர், "காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த சட்டங்களை காங்கிரஸ் பின்பற்றவில்லை. ஆனால் பாஜக பின்பற்றி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதியை முறையாக செலவு செய்யப்பட்டதா என்பதற்காகவே கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஆய்வு செய்ததில் எந்தவொரு மிஷினரி அமைப்பும் தாக்கல் செய்யவில்லை என கண்டறியப்பட்டது.

 

சாப்பாடு போட்டு மதம் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.  இந்தியாவில் எந்தவொரு மிஷினரி அமைப்பையும் பா.ஜ.க. அரசு தடை செய்யவில்லை. சிதம்பரம் மத வாதமாக பேசி வருகிறார். சி.ஏ.ஏ. சட்டம் இயற்றிய உடன் சிதம்பரம் வேலி தாண்டி வந்தவரை என்ன செய்வது என கேட்டார். வேலி தாண்டி வரும் மாட்டை அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும். பாஜக அரசு மத ரீதியாக மக்கள் பிரித்து பார்க்கவில்லை” என்றார்.