“எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க பாத்தீங்களா..?”- புலம்பும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 5 தொகுதிகளிலும் த.மா.கா.வினர் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளின் பெயரை கேட்டவுடன், “எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க பாத்தீங்களா..?” என்று கேட்கும் நிலைக்கு த.மா.கா. வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், அந்த 5 தொகுதிகளிலும் களம் காணும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் செல்வாக்கு அதீதமாக இருப்பதே.
- ஈரோடு மேற்கு – அமைச்சர் முத்துசாமி
- ராணிப்பேட்டை – அமைச்சர் காந்தி
- ஒட்டன்சத்திரம் – அமைச்சர் சக்கரபாணி
- கும்பகோணம் – சாக்கோட்டை அன்பழகன்
- கிள்ளியூர் – சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார்
இந்த 5 பேரை எதிர்த்து களம் காண வேண்டிய கட்டாயம் த.மா.கா.வுக்கு ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க. தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட வெற்றி பெறாத கிள்ளியூர். 5 தேர்தல்களாக அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தராத ஒட்டன்சத்திரம். 10 ஆண்டுகளாக தி.மு.க.வின் கொடி பறக்கும் ராணிப்பேட்டை.30 ஆண்டுகளாக உதய சூரியன் பிரகாசமாக இருக்கும் கும்பகோணம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆகிய 3 முதலமைச்சர்களின் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி களம் காணும் ஈரோடு மேற்கு.இவ்வாறு ஐம்பெரும் அரசியல் வரலாறு கொண்ட தொகுதிகளை தாராளமாக கொடுப்பது போல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.பா.ஜ.க. மேலிடம், இந்த 5 தொகுதிகளையும் அள்ளிக்கொடுத்து அக்னி பரீட்சையில் இறக்கி விட்டதாக தமிழ் மாநில காங்கிரசார் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.