×

"குறுக்கு வழியில் திமுக அரசு... பொறுப்பற்ற அறிவிப்பு" - முதல்வர் மீது பாய்ந்த காந்திய மக்கள் இயக்கம்!

 

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நேற்று முன்தினம் மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களும், ஓட்டுநர்களும் திடீர் போராட்டத்தில் இறங்கும் அளவிற்குப் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் அத்துமீறல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் படிக்கட்டு பயண சாகசங்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. மாணவர்களின் படிக்கட்டுப் பயணங்களுக்குப் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு பொறுப்பற்ற அறிக்கையைக் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இதனை வழக்கம் போல் சிகரெட், மது உற்பத்திக்கு அனுமதித்துவிட்டு சிகரெட் பெட்டியில், மதுப் புட்டியில் 'உடல் நலத்திற்குத் தீங்கானது' என்ற அறிவுரையை அச்சிடுவதற்கு இணையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக, எந்த ஓட்டுநரும், நடத்துநரும் மாணவர்களைப் படிக்கட்டுகளில் பயணிக்கப் பரிந்துரைப்பதில்லை. படிக்கட்டு பயணத்திற்குப் பேருந்து உள்ளே இடமில்லை என்ற ஒரு காரணத்தைக் கணக்கில் கொண்டாலும், பெரும்பாலும் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டும், எதிர் பாலினத்தைக் கவர வேண்டும் என்ற நினைப்பிலும் இவை செய்யப்படுபவை என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் கூட்ட நெரிசலுக்குக் காரணம், அருகாமை பள்ளிகள் இல்லை அல்லது அந்தப் பள்ளிகளில் கல்வித் தரம் இல்லை, அனைத்துப் பள்ளிகளும் ஒரே நேரத்தில் காலையில் துவங்குகின்றன, அந்தக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கப் பேருந்துகள் இல்லை போன்றவையே காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு வழிவகைகளை ஆராயாமல் குறுக்கு வழித் தீர்வுகளையே முன் வைக்கிறது அரசு. இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்த்திட, முதலில் பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும். 

அருகமைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். ஒரு நகரை அல்லது பள்ளிகள் அதிகம் இருக்கும் பகுதிகளை மண்டல வாரியாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் பயன் பெறுவார்கள். மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும், தானியங்கிக் கதவுகள் கொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனக் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.