சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க இபிஎஸ் சம்மதம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சிக்குள் எழுந்த கடும் அதிருப்தியை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் கோவையில் பேட்டியளித்த எஸ்பி வேலுமணி, "அம்மாவின் நெருங்கிய தோழி சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் பல்வேறு காரணங்களால் ஓரங்கட்டப்பட்ட அனைத்து தலைவர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் அதிமுக முழு பலத்தை பெறும்" என்று வலியுறுத்தினார். இந்த தொடர் வலியுறுத்தல் மற்றும் சமாதான முயற்சிகளை அடுத்து, கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இபிஎஸ் இல்லத்தில் நேற்று முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்எல்ஏக்கள் ஓஎஸ் மணியன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் 5 பேர் நேரில் வந்து இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
2019 முதல் தொடர் தேர்தல் தோல்விகள், 2026 சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி, 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தது, 6 பேர் ராஜினாமா, தற்போது 41 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பிரிந்து சென்ற சக்திகள் இல்லாமல் அதிமுக மீண்டு வர முடியாது என்று எஸ்பி வேலுமணி தரப்பு வைத்த வாதத்தை இபிஎஸ் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு, அதிகாரப்பூர்வமாக இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.