×

எடப்பாடி பழனிசாமி- அண்ணாமலை இடையே அமித்ஷா சமரசம்

 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பல தடைகளுக்கு பின்னர் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததற்கு பின் அதிமுகவுக்கும், பாஜகவும் இடையே விரிசல் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு விழவில்லை, அதுவே அதிமுக தோல்விக்கு காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதன்பின் பாஜகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்ததால் விரக்தியடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். இதையடுத்து அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராகவும், பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்தனர். இந்த சூழலில் தமிழ்நாட்டில் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக அறிவித்தார் அண்ணாமலை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும் என்றார். 

இந்நிலையில் இன்று இன்று டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அண்ணாமலை ஆகியோரும் உடனிருந்தனர். அவர்கள் பாஜக - அதிமுக இடையிலான விரிசல் குறித்து உரையாடியதாக தெரிகிறது. அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையே பாஜக மூத்த தலைவர்கள் சமரசம் செய்துவைத்துள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக சந்திப்பு நடந்த சிறிது நேரங்களிலேயே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது 
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் இன்று சந்தித்தனர்” என புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.