×

தேர்தலுக்காக திமுக அரசின் சூழ்ச்சி... கண்டுபிடித்து பொறிந்து தள்ளிய எடப்பாடி!

 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்எல்ஏக்கள்‌ தங்கள் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில்‌ தேவையான கட்டமைப்பு வசதிகளில்‌ உள்ள இடைவெளிகளைக்‌ கண்டறிந்து, அப்பணிகளை தொகுதி மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ செயல்படுத்திட பரிந்துரை செய்வார்கள்‌.  2020-2021ஆம்‌ ஆண்டில் 3 கோடி ரூபாயாக நிதியை உயர்த்தியது அம்மாவின் அரசு. இந்நிதி ஆண்டுதோறும்‌ ஜூன்‌, ஜூலை மாதங்களிலேயே விடுவிக்கப்படும். இந்த ஆண்டு டிசம்பர்‌ மாதமே பிறந்துவிட்டது. 

ஆனால் நிதியினை இந்த விடியா அரசு இதுவரை விடுவிக்கவில்லை. நிதி ஏன்‌ இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று விசாரித்ததில்‌, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இந்நிதியினை பயன்படுத்தி, தொகுதி மக்களின்‌ அடிப்படைத்‌ தேவைகளை பூர்த்தி செய்து விடுவார்கள்‌. இதனால்‌, ஆளுங்கட்சியினரின்‌ வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும்‌ என்பதால் நிதியினை விடுவிக்கவில்லை என்று தகவல்‌ கிடைத்துள்ளன.

உள்ளாட்சித்‌ தோர்தல்‌ நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும்‌ மாநகராட்சிகளில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், திறப்பு விழா என அனைத்து ஆளுங்கட்சியினரை வைத்தே செய்து வருகின்றனர்.‌ இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்களை அதிகாரிகள்‌ அழைப்பதில்லை. இது திமுக அரசின்‌ தீய எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பாக, உள்ளாட்சித்‌ தேர்தல்களில்‌ திமுகவினரின்‌ அராஜகங்கள் குறித்த விவரங்களை ஆளுநரிடம்‌ புகார்‌ அளித்திருந்தோம்‌.

இத்தகைய செயல்களின்‌ மூலம்‌, தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்களிலும்‌, ஆளும்‌ கட்சியினரின்‌ அதிகார துஷ்பிரயோகம்‌ மற்றும்‌ அதிகாரிகளின்‌ துணையுடன்‌ வெற்றி பெற, இந்த விடியா அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்‌ அனைவருக்கும்‌ தெளிவாகத்‌ தெரிகிறது. எனவே, இனியும்‌ தாமதம்‌ செய்யாமல்‌ 2021-2022ஆம்‌ ஆண்டுக்குரிய சட்டப்பேரவை உறுப்பினா்‌ தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும்‌ என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்‌" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.