×

"நீங்களோ நாங்களோ தீர்மானிக்க முடியாது மிஸ்டர் அண்ணாமலை" - துரை வைகோ பதிலடி!

 

சுதந்திர போராட்ட வீரரும், தியாகியுமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 236ஆவது பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தியாகம், வீரத்தால் நீங்காத புகழைப் பெற்றவர், விடுதலை விதையை முதலில் விதைத்தவர் கட்டபொம்மன். அவரது புகழ் என்றும் வாழ வேண்டும். 

இந்த மண்ணுக்கு எல்லா நிறமும், மக்களும் தேவை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் சேர்ந்து பாஜக தோற்கடிப்போம் என கூறிய திமுக நிர்வாகி ஆ.ராசாவுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது என்கிறார். அவரோ, நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளோம். 

ஒமைக்ரான் பரவலால் தேர்தல் தள்ளிப் போகலாம். எப்போது வந்தாலும், கூட்டணி தலைமையிடம் பேசி தேர்தலை சந்திப்போம். தேசிய பேரிடர் பாதிப்புக்கென 6 மாநிலங்களுக்கு ரூ.3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு முதல்வர் ரூ.6,000 கோடி நிதி கேட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் பேரிழவு நடந்துள்ளது. இதற்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு வரும் மோடியை வரவேற்கிறோம். தமிழகத்திற்கான திட்டம், நிதியை மறுத்தால் எதிர்போம்” என்றார்.