×

”எல்லோரும் நம்முடன்” – மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் மு.க.ஸ்டாலின் ?!

பத்து ரூபாய் பெறுமானமுள்ள சிப்ஸை பளபளவென பாக்கெட்டில், காற்று அடைத்து விற்கும்போது அதற்கான மதிப்பு கூடி விடுகிறது என்பது மார்க்கெட்டிங் உத்தி.., வர்த்தகத்தில் கையாளப்படும் உத்தியை கால மாற்றத்துக்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கையாளத் தொடங்கியுள்ளன. உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு இப்போது கை கொடுப்பது இந்த மார்க்கெட்டிங் உத்திகள்தான். அரசியலில் மார்க்கெட்டிங் உத்தி! கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு பின்னால் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று மார்கெட்டிங் வேலைகளை செய்தது. இந்தியாவில், 2014
 

பத்து ரூபாய் பெறுமானமுள்ள சிப்ஸை பளபளவென பாக்கெட்டில், காற்று அடைத்து விற்கும்போது அதற்கான மதிப்பு கூடி விடுகிறது என்பது மார்க்கெட்டிங் உத்தி.., வர்த்தகத்தில் கையாளப்படும் உத்தியை கால மாற்றத்துக்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கையாளத் தொடங்கியுள்ளன. உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு இப்போது கை கொடுப்பது இந்த மார்க்கெட்டிங் உத்திகள்தான்.

அரசியலில் மார்க்கெட்டிங் உத்தி!

கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு பின்னால் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று மார்கெட்டிங் வேலைகளை செய்தது. இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக முன்வைத்த ‘வேண்டும் மோடி’ யை வடிவமைத்ததும் மார்க்கெட்டிங் நிறுவனம்தான். அதன் பின்னர் 2019 மக்களவை தேர்தலில், ‘மீண்டும் மோடி’ என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்கள் மனதை மாற்றியதும் மார்க்கெட்டிங் உத்திதான்.

அரசியலும்… பிகே டீமின் செயல்பாடும்…!

இந்தியாவில், அரசியல் செயல்பாடுகளை இப்படி மார்க்கெட்டிங் உத்திகளால் வளைத்தவர் பிரசாந்த் கிஷோர். இவரது ஐ- பேக் நிறுவனம்தான் தற்போது இந்திய அளவில் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இந்திய அரசியலை ஒரு சந்தை போல மாற்றியவரும் , தேர்தல் நேரத்தில் காலத்திற்கும் பணத்திற்கும் ஏற்றார்போல் குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காகவும் வேலை செய்து வருகிறது அவரது நிறுவனம்.

2012 ஆம் ஆண்டில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல், 2014 ஆம் ஆண்டில் மோடிக்கு மக்களவை தேர்தல் , 2015 ஆம் ஆண்டின் போது நிதிஷ் குமாருக்கு பீகார் சட்டமன்ற பிரச்சாரம், 2017 இல் அம்ரீந்தர் சிங்கிற்காக பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், 2019 ஆம் ஆண்டு, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர சட்டசபை தேர்தல் எனவும் ஐ-பாக் நிறுவனம் வேலை செய்தது.


சிவசேனாவிற்காக மகாராஷ்டிரா தேர்தல், மம்தாவிற்காக உள்ளாட்சித் தேர்தல், கெஜ்ரிவாலுக்காக 2020 சட்டசபைத் தேர்தல் என்று பலருக்கும் மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றி வாகை சூட பலமாக நின்றவர் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் நேரத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள், அறிவிப்புகள், எதிர் தரப்பினரின் அரசியலை ஆட்டம் காண வகைக்கும் அளவிற்கு ஒரு ரவுண்டு வருகிறார்கள். மக்கள் அதை விரும்புகிறார்களா என்பதை விட மக்கள், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் , அரசியல் பேச ஏதுவான இடமான டீக்கடை வரை இவர்களின் கருத்து திணிப்புகள் ஆட்கொள்ளத் தொடங்கி விடுகின்றன. அந்த அளவிற்கு இவர்களின் அரசியல் யுத்தி வேலை செய்கிறது.

பிரஷாந்த் கிஷோர் பிடியில் திமுக

தமிழகத்தில் இவர்களை வலுவாக நம்பும் கட்சி திமுக. `வாரிசு அரசியல்’ என்கிற விமர்சனம் தி.மு.க மீது வைக்கப்பட்டாலும், இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று படிப்படியாகத் தலைவர் பதவியை எட்டிப் பிடித்தவர் மு.க.ஸ்டாலின்.

திமுகவின் தொண்டர்களிடம் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நன்கு அறிந்த அவருக்கும், பி.கேவின் மார்க்கெட்டிங் நிறுவனம் வேலை செய்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நமக்கு நாமே என தேர்தல் பிரசார திட்டதை வடிவமைத்தது பிராசாந்த் கிஷோர் நிறுவனம்தான். வணிகர்களுடன் சந்திப்பு,விவசாயிகளுடன் உரையாடல், வயலுக்குச் சென்று டிராக்டர் ஓட்டுவது, சைக்கிள் பயணம் என அவர்கள் வகுத்து கொடுத்த பல வழிகளை ஸ்டாலின் பின்பற்றினார். அப்போது பல விமர்சனங்களைச் சந்தித்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாமல் பயணித்தார் ஸ்டாலின். அதில் முழுமையாக வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அவரது தலைமையில் தேர்தலை வழிநடத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பி.கே நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன் ஒரு பகுதிதான், கொரோனா பேரிடர் காலத்தில் திமுக சார்பில் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘ஒன்றிணைவோம் வா’ . இந்த திட்டமும் மக்களிடம் ஓரளவு செல்வாக்கு செலுத்தியதை காண முடிந்தது. தற்போது திமுக கையில் எடுத்துள்ள மற்றொரு அஸ்திரம், ’எல்லோரும் நம்முடன்’ இதை வடிவமைத்ததும் ஐ-பாக் நிறுவனம்தான். இதன் மூலம் இணைய வழியில் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என ஸ்டாலின் அறிவித்தார். இப்படி திமுகவின் அரசியல் செயல்பாடுகள் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நம்பி இருப்பதை சொந்த கட்சியினரே விரும்பவில்லை என்கிற குரல்கள் எழுந்துள்ளன.

மு.க.ஸ்டாலினும் ஒரு பிராண்ட் போல மாறியுள்ளாரா?

70 ஆண்டுக் கால அரசியல் , கொள்கை, கோட்பாடு, மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், கட்சியை வளர்த்த முன்னோடிகள் என எதையும் முன்னிறுத்தாமல் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தை நம்புவது காலத்தின் கோலமா ? அல்லது திடீர் அரசியல்வாதிகளைப் போல மு.க.ஸ்டாலினும் ஒரு பிராண்ட் போல மாறியுள்ளாரா? என எழும் விமர்சனங்களுக்கு திமுக என்ன பதில் வைத்திருக்கிறது?

40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஸ்டாலின் “ எல்லோரும் நம்முடன்” என மக்களிடம் கூறிக்கொண்டே , ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளதை என்னவென்பது ?!

மணிக்கொடி மோகன்