×

ராஜேந்திர பாலாஜியின் பழைய ஃபைல்கள்… அனுமதி கொடுத்த ஹைகோர்ட் – பீஸ்ட் மோடில் திமுக அரசு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரைவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியைப் தவறாகப் பயன்படுத்தி
 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியைப் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லை. ஆகவே வழக்கை முடிக்கவும் பொதுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த சொத்து குறித்து மட்டும் விசாரிக்கக் கூடாது, 1996ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவரானது முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது என கூறினார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான் வழக்கு விசாரணை ஒத்திவைக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் கூறினார். தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.