×

ஓபிஎஸ்-ஐ இனி கட்சியில் சேர்த்துக்கொள்வது சாத்தியமில்லை- திண்டுக்கல் சீனிவாசன்

 

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுக் குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு மாலை வந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி கருப்பண்ணன், காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், சி.வி சண்முகம், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம், நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயத்தில் தேன் பாய்ந்தது உள்ளது. தர்மம் மீண்டும் வென்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழி நடத்தலாம் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. அத்தனை தடைகளும் நீக்கப்படுவதாக சொல்லப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால், ஓபிஎஸ்ஸை நீக்கிய நிலை அப்படியே தொடரும் என்றும், மீண்டும் கட்சியில் இணைப்பு சாத்தியமில்லை” என்றார்.