எடப்பாடியின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, செங்கோட்டையனுக்கு செல்ல வேண்டிய முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு நடுவிலும், சிறைக்குச் செல்லும் முன் இவரை முதலமைச்சராக்கி ஆட்சியை அமைத்துக் கொடுத்த சசிகலாவை, சில மாதங்களிலேயே "அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை, அவர் ஒரு வேலைக்காரி" எனக் கூறினார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் போட்டு வாக்கு சேகரித்துவிட்டு, அவர் ஜெயித்தால் தன் பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் தேர்தலையே ரத்து செய்ய வைத்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்கி, அம்மா நிறுத்திய 18 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறித்து நடுரோட்டில் நிற்க வைத்தார். தினகரனை எதிர்க்க துணையாக சேர்த்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தை, அதிகாரம் கைக்கு வந்ததும் பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசி அசிங்கப்படுத்தி கட்சியிலிருந்தே விரட்டினார். தனக்கு பக்கபலமாக இருந்த பாஜகவையும் கழற்றிவிட்டார். "எல்லாரும் ஒண்ணா சேரணும்" என்று சொன்ன மூத்த தலைவர் செங்கோட்டையனையும் ஓரங்கட்டினார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், தினகரன் எடப்பாடிக்கு ஆதரவாகவே பேசி வரும் நிலையில், அவருக்கே தெரியாமல் அமமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் விலைக்கு வாங்கி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியதாக அமமுக தொண்டர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் அமமுக கட்சியில் இருந்து விலகி சுமார் 3,700 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் தாங்களாக இணையவில்லை, அமமுகவை ஒழிக்க இபிஎஸ் போட்ட திட்டமிட்ட சதி இது என கூறப்படுகிறது.