×

”அனைவரையும் ஒன்றிணைத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதே சசிகலாவின் நோக்கம்”

 

அனைவரையும் ஒன்றிணைத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதே சசிகலாவின் நோக்கம் என சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், ஒற்றை தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக் குழுக் கூட்டமானது வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அவைத்தலைவர் அறிவித்தார். ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதை கண்டித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். இந்த சூழலில் சசிகலா, திருத்தணி கோயிலுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவரது பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட சசிகலாவை வரவேற்று ஏராளமான தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணத்தை துவக்கி வைத்தனர்.

இதனிடையே சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, “ தனது இல்லத்திலிருந்து அரசியல் புரட்சி பயணத்தை வி கே சசிகலா துவங்கினார். தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்று இணைப்பதற்கு உண்டான பயணம், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவதே சசிகலாவின் நோக்கம்” என்று தெரிவித்தார்.