×

கொரோனா ஊழல் ரூ.100 கோடி; முறைகேட்டில் மா.பா.பாண்டியராஜன் !’- ஆவடி மாநகராட்சி ஊழலை அம்பலப்படுத்தும் சா.மு.நாசர்

“அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆவடி மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார். கொரோனா நேரத்தில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது” என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் நகராட்சிகளாக இருந்த பல நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசு. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஆவடி எம்எல்ஏவாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
 

“அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆவடி மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார். கொரோனா நேரத்தில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது” என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் நகராட்சிகளாக இருந்த பல நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசு. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஆவடி எம்எல்ஏவாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இருந்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான திருச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் மாநகராட்சி ஆணையராக இருந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில் 3 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், டெங்கு காலம் முதல் கொரோனா பாதிப்பு வரை 100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர்.

இது குறித்து ஆவடி சா.மு.நாசர் கூறுகையில், “ஆவடி நகராட்சியை கடந்த ஆண்டுதான் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. இந்த சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து 13 உதவியாளர்களை நியமித்தார். அவர்கள் மூலம் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் டெங்குவிற்காக ஊழியர்களை பணியமர்த்தினார். 500 பேர் என கணக்கு காட்டி 250 பேரை வைத்து பணி செய்த வகையில் 27 லட்ச ரூபாய் மாதத்திற்கு மாபா அறக்கட்டளை வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல் கொரோனாவிற்கு மாஸ்க் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார். அரசு வழங்கும் இலவச வேட்டியில் மாஸ்க் தயாரித்து, ஒரு மாஸ்க் 6 ரூபாய் என விற்பனை செய்து வாரத்திற்கு 50 ஆயிரத்துக்கு மாஸ்க் வழங்கிவிட்டு 2 லட்சம் வரை போலியான பில்களை தயாரித்து ஊழல் செய்துள்ளனர்.

கிருமி நாசினி வாங்கியதில் ஊழல், காய்கறிகளை வழங்க வாகனங்களை ஒப்பந்தம் செய்ததில் ஊழல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தகடுகள் கொண்டு மூடியதில் ஊழல், சாலைகள் அமைத்ததில் ஊழல் என ஊழலில் உறைவிடமாக ஆவடி மாநகராட்சி இருக்கிறது. இதுவரை மூன்று மாதத்தில் மூன்று கோடி வரை அமைச்சர் பாண்டிராஜனும், அவரது பினாமியான பாண்டியனும் ஊழலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த ஊழலுக்கு துணை போகாத ஆணையரை மாற்றிவிட்டு புதிய ஆணையரை நியமித்துள்ளார் பாண்டியராஜன். புதிய ஆணையரும் முறைகேடான பில்களை பாஸ் செய்ய முடியாமல் திணறி வருகிறார். ஆவடியில் கொரோனாவை வைத்து 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. அவற்றை ஆதாரங்களுடன் விரைவில் வெளியிட உள்ளேன்” என்று கூறினார்.