×

திமுகவை நம்பி பயனில்லை – கமலுடன் ரகசிய பேச்சு நடத்தும் காங்கிரஸ் ?

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்துக்கு ஆடுபுலி ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் லாப நட்டத்தை நோக்கி நகர்கின்றன. வழக்கத்தைவிட வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பலத்த போட்டி கொண்ட தேர்தலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகள் தாண்டி காங்கிரஸ், பாமக, தேமுதிக, விசிக, சமக, புதிய தமிழகம் என குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வைத்துள்ள கட்சிகளும் அரசியல் களத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி
 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்துக்கு ஆடுபுலி ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் லாப நட்டத்தை நோக்கி நகர்கின்றன. வழக்கத்தைவிட வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பலத்த போட்டி கொண்ட தேர்தலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகள் தாண்டி காங்கிரஸ், பாமக, தேமுதிக, விசிக, சமக, புதிய தமிழகம் என குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வைத்துள்ள கட்சிகளும் அரசியல் களத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி போடும். அந்த வரிசைக்கு தற்போது பாஜக, நாம்தமிழர், அமமுக கட்சிகளும் வந்துவிட்டன. போதாதற்கு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என அரசியல் கட்சி தொடங்கி கோதாவில் குதித்து விட்டார்.

அதனால், வாக்குகளை கைப்பற்றுவதா, பிரிப்பதா என்கிற கணக்குகளில் சில கூட்டணிகள் மாறலாம் என ஆருடங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிடுவது என்கிற முடிவில் உள்ளன. ஆனால், அந்த கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகள் அதற்கு இடம் அளிக்காது என கூறப்படுகிறது. திமுக கூட்டணில் 10 ஆண்டுகளாக உள்ள காங்கிரஸ் , இந்த முறை அதிக குடைச்சல் கொடுக்கும் என கூறப்படுகிறது. கூட்டணியில் நீடிக்குமா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர்.

இதற்கான கணக்குகளையும் அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர். திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளாகவது போட்டியிட வேண்டும் என , அதன் தலைமைக்கு ஐபேக் அறிக்கை அளித்துள்ளது. மூத்த நிர்வாகிகளும் 180 லாவது போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்கு ஏற்ப மீதமுள்ளதொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கலாம் என்பது அவர்கள் கணக்கு. அதாவது, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகபட்சமாக 60 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்குவது என முடிவாம். கிட்டத்தட்ட ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில்தான், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது. திமுக தரப்பில் இப்போதே கூட்டணி கட்சிகளிடம் ஆழம்பார்க்கப்பட்டது. ஒரு தகவல்படி காங்கிரசுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என முடிவாம். கட்சி மேலிடம் அழுத்தம் கொடுத்தால் அதிகபட்சமாக 25 தொகுதிகளுக்கு பேச்சுவார்த்தையை முடிக்க திமுக நினைக்கிறது. ஆனால், இதை தமிழக காங்கிரஸ் தலைமை விரும்பவில்லையாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களை வாங்கிவிட்டு , தற்போது குறைத்துக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற பிம்பம் வந்துவிடும். எனவே அதற்கு குறைவான எண்ணிக்கையில் போட்டியிடுவது சரியானது அல்ல என காங்கிரஸ் தமிழக தலைவர்கள் நினைக்கிறார்கள். எம்.பி தேர்தலில் கூட 10 இடங்களை வாங்கிய நாம், சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கூட வாங்கவில்லை என்றால், மக்கள் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என கொந்தளித்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்வோம் என தடாலென சரண்டர் ஆனது தமிழக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. திமுக கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, குறைந்த இடங்களை ஒதுக்கினால் என்ன செய்வது என யோசித்த மூத்த நிர்வாகிகள், வேறு சில வழிகளை குறித்து பேசியுள்ளனர். குறிப்பாக, முன்பு எப்போதையும் இல்லாத வகையில், சிறு கட்சிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு, சில மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. கிளை கழகம் வரை ஆட்கள் உள்ளனர். அதுபோல, கமலின் மக்கள் நீதி மய்யமும், இந்த முறை வாக்குகளை பிரிப்பதில் கணிசமாக பங்காற்றும். எனவே வாக்குகளை பிரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் என்ன என பேசினார்களாம். இதற்கான ரகசிய தூது வேலைகளும் நடந்துள்ளன.

இப்படி செய்வதன் மூலம், தங்களை இழக்க நேர்ந்தால், சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறதாம். இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல் , திமுக மேலிடத்துக்கு அரசல் புரசலாக கொண்டு செல்லவும் காங்கிரஸ் நிர்வாகிகள் சில வேலைகளை செய்துள்ளனர். ”கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான நமக்கு உரிய மரியாதை அளிக்காவிட்டால், அவர்களுக்கு பல தொகுதிகளின் வெற்றிவாய்ப்பு கைவிட்டுப் போகும். அவர்கள் போடும் அரசியல் கணக்குகள்போல, அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட நமக்கும் கணக்குகள் போடத் தெரியும் என சத்யமூர்த்திபவன் வட்டாரத்தில் பேசி சிரித்துள்ளனர். கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி ஒரு குத்தா என அறிவாலயம் வட்டாரம் பீதி அடித்துள்ளதாம்.