×

ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தர்ணா...

 

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி , கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, அலிம்கோ நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்த வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.  மேலும் மாவட்ட ஆட்சியருடனும் அவர் வாக்குவாதம் செய்தார்.

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “ மாவட்ட ஆட்சியர் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறினார். மற்ற மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டதாகவும்,  ஆனால் கரூரில் கமிஷன் நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் அதனை திட்டமிட்டே தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


மேலும் சிறப்பு முகாம் நட த்தக்கோரி , ஆட்சியரிடம் 6 மாதங்களாக வலியுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார். ஆட்சியர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனவும் ஜோதிமணி கூறினார்.

எம்.பி., ஜோதிமணியிடம் ஆட்சியர் பிரபு சங்கர், கைகூப்பி முகாம் நடத்தப்படும் , வாங்க செல்லலாம் எனக்கூறினார். ஆனால் முகாமை எப்போது நடத்துவீர்கள் எனக் கூறினால் மட்டுமே வருவேன் .. இல்லையேல் போராட்டம் தொடரும் எனக் தெரிவித்தார். மேலும் ஆட்சி மாறினாலும், ஊழல் அதிகாரிகள் மாறவில்லை எனவும் ஜோதிமணி சாடினார்.