×

திரௌபதி முர்முவுக்கு சிவ சேனா ஆதரவு அளித்தால் அது வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.. காங்கிரஸ் கிண்டல்

 

திரௌபதி முர்முவுக்கு சிவ சேனா ஆதரவு அளித்தால் அது வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும் என்று உத்தவ் தாக்கரே தலைமையை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக சிவ சேனா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் தங்களது கருத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, தனது முடிவை விரைவில் சொல்கிறேன் என்று எம்.பி.க்களிடம் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்காமல், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் டிவிட்டரில், திரௌபதி முர்முவுக்கு சிவ சேனா ஆதரவு அளித்தால் அது வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும். ஏனென்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், முன்பு பாலாசாகேப் தாக்கரே பிறப்பித்த உத்தரவுகளை எம்.பி.க்கள் பின்பற்றுவார்கள். இந்த முறை எம்.பி.க்கள் உத்தரவிட்டதும், கட்சியினர் பின்பற்றுவதும் நடக்கும். இது சிவ சேனாவின் உள்கட்சி ஜனநாயகத்தின் சோதனையாக இருக்கும் என பதிவு செய்துள்ளார்.