பஞ்சாப் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை.. காங்கிரஸ் தலைமையின் முடிவால் சித்து அதிர்ச்சி
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் போட்டியிட காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல் வேட்பாளர் தான் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வந்தார். ஆனால் நவ்ஜோத் சிங் சித்துவின் முதல்வர் வேட்பாளர் கனவை காங்கிரஸ் கட்சியின் தலைமை கலைத்துள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை கூட்டு தலைமையின்கீழ் சந்திக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல். பஞ்சாபில் உள்ள பல்வேறு சமூக வாக்காளர்களிடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு காங்கிரஸ் தலைமை இந்த முடிவு எடுத்துள்ளது. நவ்ஜோத் சிங் சித்து ஜாட் தலைவராகவும், சுனில் ஜாகர் இந்து முகமாகவும், சரண்ஜித் சிங் சன்னி தலித் முகமாகவும் காட்டபடுவார்கள் என்று அந்த கட்சியின் உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பஞ்சாப் காங்கிரஸ் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாது என்ற காங்கிரஸ் தலைமையின் முடிவு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பொதுவாக நவ்ஜோத் சிங் சித்து கூட்டங்களில் பேசுகையில், நான் இதை செய்தேன், இதை செய்வேன் என்று தொடங்குவார். அவரது பேச்சில் நாம் அணி உணர்வு காணாமல் போய்விட்டது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில தொகுதிகளுக்கு இவர்கள்தான் வேட்பாளர் என்று சித்து வெளிப்படையாக அறிவித்தார். இப்படி சீட்டுகள் விநியோகிக்கப்படும்போது தேர்தல் கமிட்டிகளை அறிவிப்பதில் என்ன பயம்? என்றும் அந்த தலைவர் கேள்வி எழுப்பினார்.