அதிகாரப் பங்கு கேட்கும் காங்கிரஸ்! கூடுதல் சீட்கள் கொடுக்கும் திமுக
தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து முன்வைத்த நிலையில், திமுக ஒற்றைக் கட்சி ஆட்சி என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், ராகுல் காந்தி – திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி இடையே இந்த விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. “பேச்சுவார்த்தை நன்றாக நடைபெற்றது. ஆனால் அதிகாரப் பகிர்வு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும்” என்று திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இரு தலைவர்களும் “தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள்” குறித்து பேசினாலும், காங்கிரஸுக்கு வழங்கப்படும் சீட்களின் எண்ணிக்கை குறித்து விவாதம் நடைபெறவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 25 சீட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 2 சீட்கள் கூடுதல் வழங்க திமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது ஏற்கனவே இரு கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. சீட்கள் அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி நேரடியாக கேட்கவில்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு சாத்தியமா என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பகிர்வு குறித்து பேச திமுக இன்னும் குழு அமைக்காதது ஏன் என்றும், அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினார்.