×

கார்த்திக் சிதம்பரத்துக்கு சம்மன்.. ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்லவும் அனுமதி....

 


சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின்  ஆடிட்டர்  பாஸ்கர் ராமனை சிபிசிஐடி கைது செய்திருக்கும் நிலையில் அவரை டெல்லி அழைத்துச்சென்று விசாரிக்கவும்  சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260 க்கும் அதிகமான சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோத விசாக்கள் வழங்கப்பட்டதாக  சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருக்கிறது.  இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பிலும், எதுவுமே  கைப்பற்றப்படவில்லை என ப. சிதம்பரம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2011 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தின்  நெருங்கிய  கூட்டாளியும், ஆடிட்டருமான  பாஸ்கர் ராமன் மூலமாகவே அணுகியதாகவும்,  இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் சிபிஐ , எஃப் ஐ ஆரில் குறிப்பிட்டிருக்கிறது.  இந்த வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர ராமன் முதல் குற்றவாளியாகவும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.    இதற்கான ஆதாரங்களாக  சிபிஐ பாஸ்கர் ராமன், கார்த்தி சிதம்பரம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் இ-மெயில் பரிமாற்றங்களை குறிப்பிட்ட தேதியுடன் இணைத்திருக்கிறது.  

இந்நிலையில் இதில் முதல் குற்றவாளியாக  சேர்க்கப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கர் ராமனை, இன்று  சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  நிலையில்,  அவரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இவ்வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை  நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.