2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்- நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் தவெகவுக்கு சாதகம்
2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்- நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் தவெகவுக்கு சாதகம்அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் நடத்த தடை தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்தக் கட்டமாக பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பதால், மீண்டும் தவெகவுக்கு கை ஓங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 6 தொகுதிகளுக்கும் ஒன்றாக இடைத்தேர்தல் நடந்திருந்தால், தவெகவுக்கு அது பெரிய சவாலாக இருந்திருக்கும். ஏனென்றால், தவெகவிடம் தேர்தல் களத்தில் செயல்படும் பெரிய அனுபவம் இல்லை. தவெகவின் நட்சத்திர பேச்சாளராகவும், ஒரே முகமாகவும் விஜய் மட்டுமே இருக்கிறார். முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே நம்பி தான் தவெக தேர்தலை சந்திக்க வேண்டும். அதிலும் விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அங்கு எதிர்க்கட்சிகள் கை ஓங்கியிருக்கும். 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடந்தால், தவெகவின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்த 2 தொகுதிகளிலும் முகாமிடுவார்கள். அதேபோல் விஜய்யின் பேச்சும் முழு கவனத்தை பெறும். பிரச்சாரம், பணம், ஆள் பலம் எல்லாம் 2 தொகுதிகளில் மட்டும் குவிக்கப்படும். ஏற்கனவே அந்த 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.