2 சீட் கொடுத்தால் திமுக கூட்டணியில் விசிக தொடருமா?- நயினார் நகேந்திரன்
திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா? என பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணியில் சீட் பிரச்சனை இல்லை, கூட்டணியில் தொடருவோம் என திருமாவளவன் என்கிறார். திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா? திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். பாஜக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசிவருகிறது. கீழடியை மட்டும் வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசிவருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி, தமிழை பிரதமர் மோடி பெருமைப்படுத்திவருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் அளவுக்கு பெரிய வேலை. அமித்ஷாவே பார்த்து கொள்வார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. ஈபிஎஸ் குறிபிட்டதைப் போல் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை என்பதை அனைவரும் உணர வேண்டும். மாநாட்டில் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். முருகர் பக்தர் மாநாடு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது” என்றார்.