அன்புமணியை நெருங்கிய பாஜக... 25 சீட்டு கேட்கும் பாமக!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா அன்புமணியை சந்தித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரக்கூடிய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த பாமக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக எந்தக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு பாமக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் களத்தில் அனைவரிடமும் எழுந்துள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் என இருதரப்பும் தற்போது கூட்டணி குறித்தான கருத்துகளை தவிர்த்தே வருகின்றன.
இந்நிலையில் சென்னை, பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்து பேசி உள்ளார். இரவு சுமார் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்த சூழலில் இந்த சந்திப்பின் போதும் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அன்புமணி, பாமகவிற்கு 25 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் கேட்டதாக தெரிகிறது. இதனிடையே இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அன்புமணி ராமதாஸ் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தெரிவித்துள்ளார்.