"அதிமுகவை விட்டு வெளியேறக்கூடாது"- வேலுமணிக்கு பாஜக கண்டிஷன்
அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர டெல்லி தலைமையே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக விவகாரத்தை டெல்லி பாஜக தன் கையில் எடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் தத்தளித்த போது, தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும், அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வேண்டும் என்ற முயற்சியில் எஸ்.பி.வேலுமணி இறங்கி தவெக-விடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரின் மனநிலையும் அதுவாகவே இருந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் வேலையை பார்த்தது. இதனால் வேலுமணி தரப்புக்கும், எடப்பாடி தரப்புக்கும் மோதல் உச்சத்தை எட்டியது. சட்டசபை வாக்கெடுப்பின் போது தவெக ஆட்சிக்கு வேலுமணி தரப்பு ஆதரவு, எடப்பாடி தரப்பு எதிர்ப்பு என மோதல் வீதிக்கு வந்தது.
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்த பின், 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தான் ஒரே வாய்ப்பு, அதிமுக பலமாக இருந்தால் தான் பாஜகவுக்கு லாபம் என டெல்லி முடிவு செய்துள்ளது. அதிமுகவை விட்டு வெளியேறக்கூடாது, வேலுமணி வெளியேற முடிவு செய்திருந்தால் அதை கைவிட வேண்டும். அதிமுகவில் இருந்து இனி யாரும் தவெக-வுக்கு செல்ல விடாமல் தடுக்கும் முழு பொறுப்பு வேலுமணிக்கு. அடுத்த 2 வருடத்தில் அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு பதிலாக, எடப்பாடி - வேலுமணி மோதலில் வேலுமணிக்கு சாதகமாக டெல்லி நிற்கும் என உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.வி.சண்முகத்திடமும் வேலுமணியை பேச சொல்லி டெல்லி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வர முயற்சி எடுப்பதாக டெல்லி மேலிடம் உறுதி அளித்துள்ளது.