×

திமுக தலைமைக்கு துரோகம்-பிளாக் லிஸ்ட்டில் மூத்த நிர்வாகிகள்! ஸ்டாலின் எடுக்கப்போடும் அதிரடி ஆக்‌ஷன்

 

திமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காகவே, உள்ளூர் நிர்வாகிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய அமைத்த  36 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு தங்களது விரிவான மற்றும் கள ஆய்வு அறிக்கையை கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது. 36 பேர் கொண்ட இந்தக் குழுவினர் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ரகசியமாகவும், நேரடியாகவும் சென்று தொண்டர்களிடமும், கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி இந்த ரகசிய அறிக்கையைத் தயார் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள் திமுக தலைமையையே உலுக்கியுள்ளது. பல மாவட்டங்களில், பல ஆண்டுகளாகக் கட்சியில் உச்சகட்ட பதவிகளையும், அரசு சலுகைகளையும் அனுபவித்த மாவட்டச் செயலாளர்களும், முக்கிய தலைவர்களும் கட்சிக்கு உண்மையாக உழைக்காமல் 'முதுகில் குத்திய' விவகாரங்கள் தகுந்த ஆதாரங்களுடன், ஆடியோ மற்றும் வீடியோ சாட்சியங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, திமுக மிக எளிதாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட பல விஐபி தொகுதிகளில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்ற கட்சியினருடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு செயல்பட்டது தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காகவே, உள்ளூர் நிர்வாகிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, தேர்தல் பணிகளுக்காகத் தலைமை அனுப்பிய தாராளமான தேர்தல் நிதியை, முறையாகக் கீழ்மட்டத் தொண்டர்களுக்கும், பூத் கமிட்டி பணிகளுக்கும் கொண்டு சேர்க்காமல், முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது சொந்தப் பைகளுக்குள் சுருட்டிய அதிர்ச்சிப் புகாரும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. சொந்தக் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கத் தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது, கூட்டணி கட்சிகளுடன் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டது என அடுக்கடுக்கான புகார்கள் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.  குற்றம் நிரூபிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிப்பது, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எனப் பிளாக் லிஸ்ட் பட்டியல் தயாராகிவிட்டதாம். அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.