×

என் அப்பா உயிருக்கு ஆபத்து - சமாஜ்வாதி மூத்த தலைவர் மகன் பரபரப்பு
 

 

உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு வரும் 10ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  இத்தேர்தலில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே நேரடி  மோதல் ஏற்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில்  அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆசம் கான் உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக அவரது மகன் அப்துல்லா ஆசம் புகார் தெரிவித்திருக்கிறார்.

 முன்னாள் அமைச்சர் ஆசம் கான்,  அவரது மகன் அப்துல்லா ஆசம்  உள்ளிட்டோர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.   இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 பேரும் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

 இந்த நிலையில் அப்துல்லா ஆசம்க்கு ஜாமீன் கிடைத்து இருக்கும் நிலையில் அவர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல்லா ஆசம்,  ‘’ உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை உலகமே அறியும்.  கோரக்பூரில் தொழிலதிபர் கொல்லப்பட்டுள்ளார்.   யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது .   உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைதியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் . 

அவர் மேலும்,   ‘’ என் அப்பாவி தந்தை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.   சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.   மேலும் பாஜக ஒரு மூழ்கும் கப்பல் .   அந்த மூழ்கும் கப்பலில் இருந்து ஒவ்வொவரும்  வெளியேறி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.